அதிமுக மூன்று கோணங்கள்

அதிமுக மூன்று கோணங்கள்
Published on

பெங்களூருவில் தேவனஹள்ளி பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்திலும், கிரீன்வேஸ் சாலை பகுதியிலும், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திலும், இன்னும் சில பங்களாக்களிலும் இரவும் பகலும் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்த காலமது. பெங்களூருவில் இருந்து சசிகலா புறப்பட்டு வருவதற்கு முன்பு.

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தை எடப்பாடி கூட்டினார். கூட்டத்தில் ‘சசிகலாவின் ஆதிக்கத்திற்குள் மறுபடியும் அ.தி.மு.க. சென்றுவிடக்கூடாது' என அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் முழங்கியதெல்லாம் நடந்தது.

அதிமுக தொண்டர்கள் மத்தியில் பல கேள்விகள் உள்ளன. கேள்விகளில் முக்கியமானவை மூன்று,

அதிமுக - அமமுக இணையுமா? சசிகலா கையில் அதிமுகவின் அதிகாரம் செல்லுமா? யார் பக்கம் செல்ல வேண்டும் ?

கேள்விகளுக்கு  விடை காண முயல்கிறது இக்கட்டுரை.

ஒரு வார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர், என்று ஒரு முறை சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் நக்கலாக கேட்ட கேள்வி முக்கியமானது.

பதட்டத்தில் அதிமுகவில் நிகழும் செயல்களும் எதிர்வினைகளும் ஒரு திசையையும், சில விஷயங்களையும் உணர்த்துகிறது.

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் சார்பில் இரண்டு  முறை  அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.

சண்முகம் ஆகியோர் டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்தது, “சசிகலா தமிழகம் வரும்போது  சட்டம் ஒழுங்கு கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. கலவரம் செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்‘ என்று மாநில சட்ட அமைச்சரான சி.வி. சண்முகம்  பேசியது, ஜெயலலிதா நினைவிடம் பூட்டப்பட்டது,

அ.தி.மு.க அரசு திடீரென பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் கையகப்படுத்திய சொத்துகள் குறித்து  மனு செய்தது, அமைச்சர் சி.வி.சண்முகம் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா' என்றவுடன் மீடியாக்கள், ஜெ.வும் அப்படித்தானே' என கேட்டபோது, பதில் சொல்லாமல் தப்பித்து சென்றது போன்ற பல விஷயங்கள் பதட்டத்தில் செய்யப்பட்டதாக அதிமுகவில் பலர் வருத்தப் படுகிறார்கள்.

பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து சென்னை பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் பிப்ரவரி 21, அன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தேமுதிகவின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன், “இன்றைக்கு மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று வெளித்தோற்றத்துடன் சொல்கிற எடப்பாடி அரசு மக்கள் விரோத ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. ஐந்து வருடம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. இந்த தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்கும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருக்கிற கட்சிக்கு மரியாதை கொடுக்கிறார்கள். உரிய மரியாதையை தேமுதிகவுக்கு அதிமுக கொடுப்பதில்லை. தேமுதிக தமிழகத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சி. எங்களை அதிமுகவினர் அலட்சியமாக நினைக்கிறார்கள். நாங்கள் கூட்டணிக்காக பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.  இது மக்களுக்காக நடக்கிற போராட்டம்' என்று பேசினார். கூட்டணி கட்சியின் இம் மாதிரி போராட்டங்கள் தற்போதைய தலைமையின் பலவீனத்தை காட்டுவதாக நினைக்கிறார்கள்.

அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரான மா.சேகர் இல்ல திருமணத்தை நடத்திவைத்த டி.டி.வி.தினகரன்,'சசிகலா விடுதலை அடைந்தவுடன், தமிழகத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. சசிகலா எதற்காக தண்டிக்கப்பட்டார், என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மன்றத்தில் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்

சொற்கள் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார். அத்தனையும் சதி. இது உண்மையான தியாகத்துக்குக் கிடைத்த பரிசு.

இந்த ஆட்சி அதிகாரம் நாங்கள் கொடுத்தது. இந்த நான்காண்டு காலம் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும். கல்லாகட்டி, பர்சன்டேஜ் வாங்கியவர்கள், 100 சத விகிதம் சகிகலாவைச் சேர்க்க மாட்டோம் என்கிறார்கள். ஊடகத்தினர் கேட்டால் அவர்களிடம் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு தாவிக் குதித்து ஓடுகிறீர்கள்.  சசிகலா வரவேற்புக்கு 192 கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கூறுகிறார்கள். என்னமோ அந்தத் தொகையை இவர்கள் கொண்டுவந்து கொடுத்ததுபோலவே பேசுகின்றனர். வந்திருந்த அனைவரும் சொந்தச் செலவில் குடும்பத்தோடு சின்னம்மாவை வரவேற்க வந்தனர்.‘ எனக் கூறியது, தினகரன் சண்டைக்கு தயார் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

9ஆம் தேதி காலை சென்னை வந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார்.ஜெயலலிதா பிறந்த நாளை அவர் தங்கியிருக்கும் வீட்டில் கொண்டாடினார், பின் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்  சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் சீமான், பாரதிராஜா, அமீர் மற்றும் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் நேரில் வந்து சசிகலாவைச் சந்தித்தனர். சசிகலா மூலமாகத்தான் எம்.எல்.ஏ. ஆனேன் எனத் தெரிவித்திருக்கும் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் சசிகலாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள் ளனர். சசிகலாவை சந்திக்க அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வருவார்கள் என அதிமுக, அமமுக இரு வட்டாரங்களிலும் கூறப்படுகிறது. அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும், அதிருப்தியில் உள்ளோரும் சசிகலாவை நோக்கி நகர்ந்து வருவார்கள் என்று கூறப்படுகிறது. 

சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விதவிதமான கதைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.

அமமுக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, இன்னும் சில கட்சிகளை இணைத்து புதுக் கூட்டணி அமையக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக ஊகங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இது மக்கள் நலக் கூட்டணி 2.0 என்றால் அதனால் யாருக்கு பாதிப்பு ?

‘அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்‘ என்ற கோஷத்தின் சுருதி  தற்போது குறைந்து விட்டது.‘ விசுவாசம் மிக்கவர், நல்லவர், வல்லவர், திறமையானவர்‘ எனத் தன்னை முன்னிறுத்தி விளம்பரம் வெளியிடும் ஓ.பி.எஸ் கூட, ‘அம்மாவின் ஆட்சியமைப்போம்‘ என்றே பேசுகிறார்.

சசிகலாவை எதிர்த்து தொடர்ந்து பேசிவருபவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டும் தான் , ஓபிஎஸ், செங்கோட்டையன், விஜய பாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார்,உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜு   என்று பலர் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

‘தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா? ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் எப்படி சரிக்கட்டலாம்?‘ என்று ஓ.பி.எஸ் பிப்ரவரி 6-ஆம் தேதி, தலைமைக் கழகத்தில், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கேட்ட கேள்வி, இப்போதும் தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது.

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாட்சியில் சாதனை படைத்ததாக தன்னை முன்னிறுத்தி அதிக விளம்பரம் கொடுக்கும் எஸ்.பி.வேலுமணி எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாத சாதனைகளை செய்துவிட்டதாக  சொல்லாமல் சொல்கிறார். பலருக்கு ரகசிய கனவுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிய சசிகலா, விசுவாசமாக இருந்தால் இந்த தேர்தலிலோ அல்லது அடுத்த  தேர்தலிலோ துணை முதல்வர் பதவியையாவது தரலாம் /கேட்டுப்பெறலாம் என்ற திட்டத்தில் உள்ளனர். சசிகலா  விடுதலையானவுடன் பழனி முருகனுக்கு அதிமுகவின் முக்கிய தலைவர் போய் மொட்டை போட்டார். வேண்டுதலுக்காக என்று கூறப்பட்டது. என்ன வேண்டுதல் என்று செய்தியாளர்கள் கேட்க,‘புன்னகைத்துவிட்டு' நகர்ந்து விட்டார். புன்னகையின் அர்த்தம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதேப் போல் பலர் வேண்டுதல்களை செய்து விட்டு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியிலும் எந்த மாற்றமும் இல்லை என்பது சென்னைக்கு மோடி வந்து சென்ற பின்பு முடிவாகிவிட்டது என்று கூறப்பட்டலும் தேர்தலுக்கு முன், அதிமுகவுக்குள் அதிரடி மாற்றங்கள் நடக்கும், சசிகலா மீண்டும் இணைவார், அமமுகவும் அதிமுகவுடன் இணைக்கப்படும் என்று இன்னும் ஊடகங்களில் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி, 9,10,11 வகுப்புகள் தேர்வு இல்லாமல் பாஸ், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு காலம் 58 லிருந்து 60 ஆக நீட்டிப்பு, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு என்று பல விஷயங்களை  தேர்தலை குறிவைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி காலகட்டத்தில் செயல்படுத்தினார். இதுவெல்லாம் வாக்குகளாக மாறுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதிமுகவின் செல்வாக்கு பகுதியான கொங்கு மண்டலத்தை எடப்பாடி ஸ்பெஷலாக கவனித்து வந்தார். ஆனால் அதற்கு சேதாரம் பாஜக மூலம் வருவது போல் தெரிகிறது. பாரதிய ஜனதா தலைவர்கள் கோவையில் குவிகிறார்கள். வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர், ஜி.கே.செல்வக்குமார் போன்ற தமிழக தலைவர்களும்,மோகன் பகவத், கிஷண் ரெட்டி, வி.கே.சிங் மற்றும் சந்தோஷ் போன்ற தேசிய புள்ளிகளும் கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து முகாமிட்டு வேலை செய்வதைப் பார்த்தால் பாஜக கோவை வட்டாரத்தில் அதிக இடங்களை கேட்பார்கள் என்று ஒரு கலக்கம் அதிமுகவில் ஓடுகிறது.இந்த பயத்தை உறுதி செய்வது போல் கோவையில் பிரதமர் கூட்டத்தில் பேசிய  வானதி சீனிவாசன் பேச்சு இருந்தது. நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இரட்டை இலக்கத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்து சட்ட மன்றத்திற்குச் செல்வார்கள் என்று வானதி சீனிவாசன் சொன்னார்.

 அப்படி எனில் இங்கே பாஜக எத்தனை சீட் எதிர்பார்க்கிறது என்ற பேச்சு அதிமுகவில் புளியைக் கரைத்தது. இது போக கோவை வந்த மோடி முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்று கூறி  வாக்கு கேட்கவில்லையே என்ற வருத்தமும் அவரது ஆதரவாளர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

‘நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், அ.தி.மு.க-வுக்கு வாழ்வா சாவா என்கிற தேர்தல். நாம் வெற்றி பெறவில்லையெனில், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.  நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிதான்' என கும்பகோணத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் இருந்து வரும் போது கிருஷ்ணகிரி கத்திகுப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ‘அதிமுக பல சோதனைகளை சந்தித்த போதும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்துள்ளது. புரட்சித்தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே எனது விருப்பம்' என்று குறிப்பிட்டார்.

மேற்கூறிய இரண்டு பேச்சுகளும் ஒரு கோட்டில் சந்திப்பதாக தோன்றுகிறது.ஒற்றுமையோடு செயல் பட வேண்டுமென்ற குரல் அதிமுகவில் பல தளங்களில் ஒலிக்கிறது.

அதிமுக தொண்டர்கள் மத்தியில் உள்ள முக்கியமான மூன்று கேள்விகளை எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவோடு தொடர்பில் இருக்கும் மூத்த பத்திரிகையாளரிடம் கேட்டோம்,‘அதிமுகவை மீட்க, பலமிக்க தாக மாற்ற  ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர். இறந்தபோது தமிழகத்தில் ‘ஜா' அணி, ‘ஜெ‘ அணி என இருந்தது. அதன்பின் ஜெ அணி மட்டும் நிலைத்தது. தற்போது  சசிகலா அணி, எடப்பாடி அணி, மற்றும் மதில் மேல் அணி என்று மூன்று அணிகள் உள்ளன. ஆட்சியை விட கட்சி முக்கியம். கட்சி பலமாக இருந்தால் ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் பிடிக்கலாம். மூன்று கேள்விகளுக்கான பதில் ஒருவரிடம் உள்ளது, அவர் இணைத்து தீர்வைத் தருவார்' என்றார். ‘இது தேர்தலுக்கு முன்பா, பின்பா ?' என்று மீண்டும் கேட்க,‘விடை 1989 இல் உள்ளது' என்று புன்னகைத்தார்.

மார்ச் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com